சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் நம்முடைய கவியரசர். இவரது இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. நம்முடைய கவியரசரசரையும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். நம்முடைய கவியரசர் எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் நம்முடைய வியரசர்.
சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது.
ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், “ப்ரூப் திருத்துனர்” வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ” கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
இந்திய தேசிய ராணுவம் பற்றி நம்முடைய கவியரசர் ஒரு நாளிதழுக்கு எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். நம்முடைய கவியரசர் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய கவியரசருக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் நம்முடைய கவியரசரும் சேர்க்கப்பட்டார்.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் நம்முடைய கவியரசர்.
கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய நம்முடைய கவியரசர் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார்.
நம்முடைய கவியரசர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். 36 ஆண்டுகள் கடந்தும் நம்முடைய கவியரசர் இன்னும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர்.
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.
வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், “”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதையை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது” என்றார்.
மேடைக்கு சம்பந்தமில்லாதவர்
ஒரு பட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் கவிஞர் அரு.நாகப்பன். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.
பட்டிமன்றத்தலைவர்.ம.பொ.சிவஞானம் . தலைப்பு: குடும்பக்கட்டுப்பாடு முதலில் பேசிய அரு.நாகப்பன் சபைத் தலைவருக்கு இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:
“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்! என்றார் கவிஞர் அரு.நாகப்பன். சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.அவருக்கு என்ன தெரியும்? ஆகவே அவருக்குத்தான் தகுதியில்லை. அவரை முதலில் கீழே இறக்குங்கள்’ என்றதும் சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!